

திருச்சி,
ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டேன். அவர்கள் சரியாக கவனிக்காமல் இருந்து விட்டு திருப்தி இல்லை என்கின்றனர்.
உற்பத்தி திறன் இருக்கும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு துறை உபகரணங்கள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்படுகிறது. அரசு தொழிற்சாலை மட்டும் தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது இல்லை. தனியார் நிறுவனங்களிலும் விதிமுறைகளுக்குட்பட்டு உற்பத்தி செய்யலாம்.
தமிழகத்தில் எங்களுக்கு (பா.ஜ.க.) எம்.எல்.ஏ. இல்லை என்றாலும், ஒரு குறையும் இல்லாமல் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் இங்கு வந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களில் பெருமளவு தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு எம்.பி.யை தமிழகத்தில் இருந்து கொடுத்தாலும், குறை இல்லாமல் தமிழகத்திற்கு மோடி நல்ல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றியது பிரதமர் மோடி தான். பா.ஜ.க. அரசால் தமிழகத்திற்கு எந்த குறையும் இல்லை.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தமிழக தலைமையினர் பேசுவார்கள். திருச்சியில் தேர்தலில் போட்டியிட எனக்கு ஆசையில்லை. எனக்கு கொடுத்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கடற்படை மூலம் ரோந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம், தமிழக அரசை மத்திய அரசு அடிமை போல நடத்துவதாக எதிர்க்கட்சியினர் கூறுவது குறித்து கேட்டபோது, அவர் அப்படி ஒன்றுமில்லை என்றார்.