தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு

தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.
தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
Published on

மும்பை,

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தொழில் அதிபர்களுடனான ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டியம் உங்கள் வீடு போன்றது. நாடு தழுவிய அளவில் மேக் இன் இந்தியா' திட்டம் உள்ளது. இதேபோல மேக் இன் மகராஷ்டிரா' திட்டத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மராட்டியத்தில் ஒவ்வொரு தொழில் அதிபர்கள் குறைந்தபட்சம் ஒரு தொழிலையாவது மாநிலத்திற்கு கொண்டு வர வேண்டும். இதற்கு நாங்கள் உடனடியாக அனுமதி வழங்குவோம். கொரோனா பரவும் இந்த சிக்கலான நேரத்தில் கூட தொழில்நிறுவனங்கள் மராட்டியத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றன. இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை

மும்பையில் 50 சதவீத மக்கள் குடிசை பகுதிகளில் வாழ்கின்றனர். எனது தந்தை (பால்தாக்கரே) ஏழைகளுக்கு சொந்தமாக வீடு வழங்க கனவு கண்டார். கொரோனா பிரச்சினைக்கு பிறகு அது எங்களது கனவாக இருக்கும். தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்.

தேவையான இடங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும்.

இப்போது பெரும்பாலான பணிகள் ஆன்லைனில் நடப்பதால் மராட்டியத்தில் தொலைத்தொடர்பு வலையமைப்பை வலுப்படுத்துவதில் இந்த அரசாங்கம் கவனம் செலுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com