ஆத்தூரில் பட்டப்பகலில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியரை கட்டிப்போட்டு ரூ.3.30 லட்சம் கொள்ளை

ஆத்தூரில் பட்டப் பகலில் தனியார் நிறுவன ஊழியரை கட்டிப்போட்டு ரூ.3.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஆத்தூரில் பட்டப்பகலில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியரை கட்டிப்போட்டு ரூ.3.30 லட்சம் கொள்ளை
Published on

ஆத்தூர்,

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை லீ பஜார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மரவள்ளிக் கிழங்கை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இதன் உரிமையாளர் பெருமாள் நாயுடு. இந்த நிறுவனத்தில் ஆத்தூரை சேர்ந்த சேக் தாவூத் (வயது 52) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று காலை வழக்கம் போல தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் வந்தார். அவர் தான் காங்கேயத்தில் இருந்து வருவதாகவும், தன்னிடம் மரவள்ளிக்கிழங்கு உள்ளது, 100 கிழங்கை என்ன விலைக்கு வாங்குவீர்கள்? என்று விலை கேட்டுள்ளார்.

அந்த நேரத்தில் திடீரென்று மற்றொரு வாலிபர் அலுவலகத்துக்குள் நுழைந்து கத்தியை காட்டி, சேக் தாவூத்தை மிரட்டினார். பின்னர் 2 பேரும் சேர்ந்து அவரை கயிற்றால், நாற்காலியோடு சேர்த்து கட்டிப்போட்டனர். மேலும் சத்தம் போட்டால் கத்தியால் குத்திக்கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

தொடர்ந்து அவர்கள் அலுவலக மேஜை டிராயரில் இருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்கள். மேலும் அங்கிருந்த செல்போனை எடுத்து சென்று விட்டனர். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நாற்காலியில் அமர்ந்தவாறு சேக் தாவூத் சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சேக் தாவூத்தை மீட்டனர்.

பின்னர் இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து சேக் தாவூத் போலீசாரிடம் கூறுகையில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சரளமாக தமிழ் பேசியதாகவும், ஒருவன் முகமூடி அணிந்து இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் சம்பவம் நடந்த நிறுவனத்தின் அருகே உள்ள வே-பிரிட்ஜில் கண்காணிப்பு கேமரா உள்ளது. இந்த கேமராவில் பதிவான காட்சிகளில் மர்ம ஆசாமிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூரில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com