தனியார் மருத்துவமனை பெயர் பலகையில் மின்கசிவு: மின்சாரம் தாக்கி கார் டிரைவர் பலி

தனியார் மருத்துவமனையின் மின்சார பெயர் பலகையில் மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இன்னும் 2 மாதத்தில் திருமணம் நடக்க இருந்தநிலையில் அவருக்கு இந்த சோகம் நிகழ்ந்துவிட்டது.
தனியார் மருத்துவமனை பெயர் பலகையில் மின்கசிவு: மின்சாரம் தாக்கி கார் டிரைவர் பலி
Published on

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ஜெயராஜ் (வயது 31). இவர், தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் கார் டிரைவராக வேலை செய்துவந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலைமுடிந்து தனது நண்பர் விஷால்(25) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். வழியில் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள ஒரு துரித உணவகத்தில் சாப்பிடுவதற்காக மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் கீழே இறங்கினர்.

மழைபெய்து சாலையில் தண்ணீர் தேங்கிநின்றதால், அந்த தண்ணீரில் இறங்கிய ஜெயராஜூக்கு கால் வழுக்கியது. நிலைதடுமாறிய அவர், கடைக்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் ஒரு கையும், அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையின் மின்சார பெயர் பலகை கம்பியில் ஒரு கையையும் வைத்ததாக தெரிகிறது.

அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவரை, அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். முதல்கட்ட விசாரணையில், மழை பெய்ததால் மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு அதைதொட்ட ஜெயராஜ், மின்சாரம் தாக்கி பலியானதாக கூறப்பட்டது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்படவில்லை என்பதும், தனியார் மருத்துவமனை மின்சார பெயர் பலகை இரும்பு கம்பியில்தான் மின் கசிவு ஏற்பட்டு, அதை ஜெயராஜ் தொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த ஜெயராஜூக்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது. இன்னும் 2 மாதத்தில் அவருக்கு திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com