

தேனி,
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு சார்பில் இதுவரை எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட கதிர்காமு ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இருவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த தொகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த ஆண்டு நிதி முழுவதுமாய் சிக்கல் இன்றி செலவு செய்யப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில், நடப்பு நிதியாண்டுக்கான நிதியை செலவு செய்வது தொடர்பாக இன்னும் அரசின் வழிகாட்டுதல் எதுவும் வரவில்லை. இதனால், இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யும் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை எப்படி மேற்கொள்வது என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கடந்த நிதியாண்டு வரை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டு இந்த தொகை ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்கூட்டியே, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் வந்திருந்தன. அதன் மூலம் கடந்த நிதியாண்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த ஆண்டுக்கான நிதியை செலவு செய்வது தொடர்பாக பரிந்துரை செய்ய தற்போதைய சூழ்நிலையில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை. எனவே, இதற்காக ஒதுக்கப்படும் நிதியை எந்த அடிப்படையில் செலவு செய்வது என்பது தொடர்பாக அரசிடம் இருந்து இன்னும் வழிகாட்டுதல் எதுவும் வரவில்லை. வழிகாட்டுதல் வரும் முன்பே நிதி ஒதுக்கீடு வந்து விட்டால், அரசிடம் விளக்கம் கேட்டு அதன்பேரில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.