பெங்களூருவில் திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

பெங்களூருவில் திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூருவில் திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
Published on

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி எல்லைக் குட்பட்டபகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், நகரில் உள்ள திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட தட்டுகள், கரண்டிகள், டம்ளர்கள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக ஸ்டீல், செராமிக், மெலமைன் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட தட்டுகள்,கரண்டிகள், டம்ளர்களை பயன்படுத்தலாம். இந்த வகையான பொருட்களை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்காக திருமண மண்டபங்களில் ஆர்.ஓ. எனும் தண்ணீர் சுத்திகரிப்பு முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்க வேண்டும். மேலும், மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் கொட்டுவதற்கு தனித்தனி குப்பை தொட்டிகள் பிளாஸ்டிக் அல்லாமல் வைத்திருக்க வேண்டும். இந்த குப்பை தொட்டிகள் வண்ணங்கள் பூசப்பட்டு எளிதில் அடையாளம் காணும் வகையில் இருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் பணி செய்யும் துப்புரவாளர்களுக்கு கையுறை, காலணிகள் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 மாத காலஅவகாசம்

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், பங்களூரு நகரில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து இடங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இந்த புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு முறையில் பொதுமக்களுக்கு தரமான குடிநீர் வினியோகிப்பதால் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்கலாம். இந்த புது உத்தரவை செயல்படுத்த 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் உத்தரவை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கபடும். வாழை இலைக்கும் தடை விதிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. என்றார்.

இதுபற்றி கர்நாடக ஓட்டல் மற்றும் உணவு விடுதி சங்கத்தின் தலைவர் சந்திரசேகர ஹெப்பார் கூறுகையில், ஆர்.ஓ. குடிநீர் சுத்திரிப்பு முறையை நடைமுறைப்படுத்த கூறியதும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க கூறுவதையும் வரவேற்கிறோம். வாழை இலையில் சாப்பிடுவது அறிவியல்ரீதியாக உடல்நலத்துக்கு நல்லது என்று கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால், வாழை இலையை பயன்படுத் தடை விதிக்கப்பட உள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com