வீடுகளை காலி செய்ய அனுப்பிய நோட்டீசுக்கு எதிர்ப்பு, கரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தர்ணா

வீடுகளை காலி செய்ய அனுப்பிய நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வீடுகளை காலி செய்ய அனுப்பிய நோட்டீசுக்கு எதிர்ப்பு, கரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் தர்ணா
Published on

கரூர்,

கரூர் நகராட்சி பகுதியில் மாவடியான் கோவில் பக்கம் அமராவதி ஆற்றின் கரையோரம் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். குடிசை மற்றும் கான்கிரீட் வீடுகள் கட்டியும் வசிக்கின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சலவை தொழில் செய்வதும், மீன் பிடி தொழிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். நகராட்சி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதியாக இருப்பதால் நகராட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற்று வருமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் தடையில்லா சான்றிதழ் கேட்டு நகராட்சி நிர்வாகத்திடம் விண்ணப்பித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

பட்டா இல்லாவிட்டாலும் நகராட்சிக்கு சொத்து வரியை அப்பகுதி பொதுமக்கள் செலுத்தி வந்துள்ளனர். மேலும் மின் இணைப்பு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாவடியான் கோவில் பக்கம் அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் சிலருக்கு நகராட்சி நிர்வாகம் ஒரு நோட்டீசு அனுப்பியது. அதில், ஆக்கிரமிப்பு இடத்தில் வசிப்பதால் வீடுகளை காலி செய்யும்படி கூறியிருந்தனர். மேலும் நோட்டீசு கிடைக்கப்பெறாதவர்களும் வீட்டை காலி செய்ய வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். மேலும் அலுவலக வளாகத்தில் நகராட்சி ஆணையர் காரின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். வீடுகளை காலி செய்யமாட்டோம் என முழக்கமிட்டனர். மேலும் தற்போது உள்ள இடத்தை விட்டு வேறு இடம் சென்றால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பொதுமக்களின் இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து நகராட்சி அதி காரிகளிடம் பொதுமக்களை போலீசார் அழைத்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தினால் கரூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com