வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் கே.கே.சாலை ராஜீவ்காந்தி நகர், இந்திரா நகர், மணிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் 500 வீடுகளில் 3 ஆயிரத்து 500 பேர் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள், நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வந்து அளவீடு செய்து கல் நட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி கல் நடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்புகளின் விவரங்கள் குறித்து அறிக்கை அனுப்புமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டிருப்பதாக வந்த தகவலை கேட்டு நாங்கள் அதிர்ச்சியில் உள்ளோம்.

நாங்கள் முறையாக வீட்டுவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை அரசுக்கு செலுத்தி வருகிறோம். மேலும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையும் பெற்றுள்ளோம். எங்களது குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதி பட்டாவை சேர்ந்த குடியிருப்புக்கு அருகிலேயே உள்ளது. எனவே எங்களால் போக்குவரத்துக்கும், நீர்பிடிப்புகளுக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது.

கடந்த 10 ஆண்டுகளாக ஏரி நீர் நிலையில் நிரம்பும் மழைநீரானது உடனடியாக வாய்க்கால் வழியாக வெளியேறி விடுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு எந்த வெள்ள அபாயமும் இல்லை. தற்போது இந்த இடத்தை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்களது குடியிருப்புகளை அகற்றினால் எங்களது எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். ஆகவே நாங்கள் குடியிருந்து வரும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com