மீன் எண்ணெய் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

தொண்டி அருகே மச்சூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் மீன் எண்ணெய் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் திருவாடானை தாலுகா, யூனியன் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன் எண்ணெய் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
Published on

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள வட்டாணம் மச்சூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை இங்கு செயல்படுவதால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும், எனவே இந்த தொழிற்சாலையை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி வட்டாணம், கொடிப்பங்கு, தேளூர், பனஞ்சாயல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமனோர் நேற்று காலை திருவாடானை தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

அதனைதொடர்ந்து ஓடவயல் வில்லாயுதம், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் போஸ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரவிச்சந்திரன், கணேசன், மோகன்ராஜ், அய்யப்பன் ஆகியோர் திருவாடானை தாசில்தார் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சாந்தி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை நேரில் ஆய்வு செய்வதாகவும், அங்குள்ள பொதுமக்களின் பாதிப்புகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் பொதுமக்கள் திருவாடானை யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து தொண்டி அருகே உள்ள வட்டாணம் மச்சூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலையை உடனடியாக மூட வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com