செய்யூர் அருகே கிராமங்களை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி

செய்யூர் அருகே கிராமங்களை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
செய்யூர் அருகே கிராமங்களை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி
Published on

வெள்ளம் சூழ்ந்துள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவுக்கு உள்பட்ட சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் சூனாம்பேடு, வன்னிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் செங்கல்பட்டு மாவட்ட எல்லையோர ஓங்கூர் ஆற்றங்கரை பகுதியில் சூனாம்பேடு, புதுப்பட்டு, புதுகுடி, வெள்ளை கொண்டஅகரம், விளாம்பட்டு போன்ற கிராமங்கள் ஆற்றங்கரை ஓரமாக உள்ளது.

இங்குள்ள ஆற்றுக்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகமானதையடுத்து ஆற்றங்கரை உடைந்து புதுப்பட்டு, புதுக்குடி, விளாம்பட்டு போன்ற கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து தீவு போல் உள்ளது.

இடுப்பளவு தண்ணீரில்

இங்கு வசிக்கும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு உணவு, தங்குமிட வசதிகள் எதுவும் செய்து தரப்படாததால் அவதிக்குள்ளாகி உள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர் சீதா, செய்யூர் தாசில்தார் வெங்கட்ராமன், செய்யூர் எம்.எல்.ஏ. பாபு, சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் ஆகியோர் அந்த பகுதி மக்களை சந்தித்து பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடங்களை கொடுப்பதாக உறுதி அளித்து சென்றனர். மேலும் வன்னியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட விளாம்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். அவர்களை மீட்டு வேறு இடத்திற்கு அனுப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சித்தாமூர்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வண்ணியநல்லூர் ஊராட்சிக்குட்பட்டது விளாம்பட்டு கிராமம். ஆற்றங்கரையோரம் உள்ளது. அங்கு 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தற்போது பெய்த மழையின் காரணமாக ஆற்று நீர் ஊருக்குள் புகுந்ததால் ஊரை சுற்றி தண்ணீர் நிரம்பி உள்ளது. அங்கு உள்ளவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனர். தங்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன்னியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் பாதிக்கப்பட்ட பொதுமக்களை பார்வையிட்டு உணவு, தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com