வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
Published on

செங்குன்றம்,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கரையில் 45 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் குடிசைகள் அமைத்து 30 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் வருவாய்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடிசைகளை அகற்றினர். இவர்களுக்கு மாற்று இடமாக அதே கிராமத்தில் உள்ள மாந்தோப்பு பகுதியில் புறம் போக்கு நிலத்தில் அதிகாரிகள் இடம் ஒதுக்கினர்.

அங்கு 45 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் குடிசைகள் அமைத்து 9 மாதங்களாக வசித்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் பெரியபாளையம் அடுத்துள்ள மஞ்சாகாரணையில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 45 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க டோக்கன்கள் வழங்கினார்.

ஆனால் வருவாய்துறை அதிகாரிகள் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், வீட்டுமனை பட்டா உடனே வழங்கக்கோரியும் 45 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைவாழ் மக்கள் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார். பின்னர் சங்க முக்கிய பிரதிநிதிகள் துயர்துடைப்பு தாசில்தார் லதாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அவர் இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com