புதுச்சேரி விடுதலை நாள் விழா: நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடந்த கோலாகல விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றினார்.
புதுச்சேரி விடுதலை நாள் விழா: நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி விடுதலை நாள் விழா கடற்கரை காந்தி திடலில் நேற்று காலை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு காலை 9 மணியளவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வந்தார். அங்கு அவர் போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசியகீதம் இசைக்க தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அரசு செயலாளர் ஆலிஸ்வாஸ், போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.

அதன்பின் நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பினை முதல்-அமைச்சர் நாராயணசாமி பார்வையிட்டார். பின்னர் விழா மேடைக்கு வந்து விடுதலை நாள் விழா உரையாற்றினார். அதைத்தொடர்ந்து காவல் துறை, தீயணைப்பு துறை, தேசிய மாணவர் படை, பள்ளி, மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. அதன்பின் பல்வேறு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

விழாவில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், எம்.எல்.ஏ.க்கள் சிவா, அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், செல்வகணபதி, சங்கர், தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அரசு செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், தியாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலை நேரு சிலை முன்பு அமைக்கப்பட்டிருந்த புதுச்சேரி வரலாறு எனும் புகைப்பட கண்காட்சியை நாராயணசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கிருந்து புறப்பட்ட அவர் நேராக சட்டசபை வளாகத்திற்கு வந்தார். அங்கு தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com