புதுச்சேரி கோவில்களில் அன்னதான திட்டம் தொடக்கம் நாராயணசாமி தகவல்

பொங்கல் பண்டிகை முதல் புதுச்சேரி கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி கோவில்களில் அன்னதான திட்டம் தொடக்கம் நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அன்னதான திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட்டில் கூட்டத்தில் அறிவித்தார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் நடந்தது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் கோவில்களின் நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது கருத்து தெரிவித்த அதிகாரிகள், பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்து அனைத்து நாட்களிலும் அன்னதானம் வழங்க முடியாது என்றும் அன்னதானம் வழங்கினால் நாளொன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவாகும் என்று தெரிவித்தனர்.

அவர்களிடம் முதல்- அமைச்சர் நாராயணசாமி, கோவில்களில் அன்னதானம் என்பது முறையாக வழங்கப்பட வேண்டும். பெரிய கோவில்களில் தை மாதம் 1-ந்தேதி முதல் அன்னதான திட்டம் தொடங்கப்பட வேண்டும். கோவில்களின் வரலாறு, விழாக்கள் போன்றவற்றை டிஜிட்டல் மயமாக்க உள்ளோம். எனவே அதுகுறித்து விவரங்களை அரசுக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் கோவில்களின் சொத்து குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்படும். கோவில்களின் வருவாயை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். கூட்டத்தின் முடிவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மணக்குள விநாயகர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், குரு சித்தானந்தசாமி கோவில், பாகூர் மூலநாதர் கோவில், வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில், வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில், காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவில் போன்றவற்றில் வருகிற தை மாதம் 1-ந்தேதி (பொங்கல் பண்டிகை) முதல் அன்னதான திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்கு பக்தர்களிடம் உள்ள வரவேற்பினை பொறுத்து பிற கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com