புதுக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம்

புதுக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம்
Published on

ஆவூர்,
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அண்ணாநகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 3 நாட்களும் விநாயகர் சிலைக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் சரக்கு ஆட்டோவில் விநாயகர் சிலை ஏற்றப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் மாத்தூர் சொக்கலிங்கபுரத்தில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையுடன், கற்பக விநாயகர் கோவிலில் அமைக்கப்பட்ட சிலையையும் சேர்த்து ஊர்வலமாக திருச்சி விமானநிலையம் வழியாக கொண்டு செல்லப்பட்டு, திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில் மாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கலைச்செல்வி தர்மராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் அய்யாவு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல நீர்பழனி, குன்னத்தூர், பிடாரம்பட்டி, மலம்பட்டி, வில்லாரோடை, மண்டையூர், சித்தாம்பூர், குமாரமங்களம், மத யானைப்பட்டி, ஆத்துப்பட்டி, எழுவம்பட்டி, காயாம்பட்டி, கொலுப்பட்டி, செங்களூர் ஆகிய ஊர்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் விநாயகர் சிலைகள் நேற்று மாலை வாகனத்தில் ஏற்றப்பட்டு தாரை தப்பட்டை மற்றும் வாண வேடிக்கை முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்தந்த ஊர்களில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

இதேபோல நார்த்தாமலை சிவன் கோவிலில் பக்தர்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து டிராக்டரில் எழுந்தருள செய்து, மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நார்த்தாமலை மலையடியில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று அந்த சிலைகள் புதுக்கோட்டை திலகர் திடலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புதுக்கோட்டை புதுக்குளத்தில் கரைக்கப்பட்டது. இதில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், தொழிலதிபர் கரிகாலன், இந்து முன்னணியின் மாநில செயலாளர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசு தேவன், கருணாகரன், அப்துல்ரகுமான் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com