

கொடைக்கானல்:
புட்டபர்த்தி சாய்பாபாவின் 11-வது ஆண்டு நினைவு தினம், மகா ஆராதனை உற்சவநாளாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சாய் சுருதி ஆசிரமத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதில் நேற்று காலை 6.30 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சி, தொடர்ந்து சாய் பஜன் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சால்வை மற்றும் கம்பிளி ஆடைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திற்கு குடிநீர் லாரி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனை சத்திய சாயி சேவா டிரஸ்டின் தலைவர் கே.ஆர்.சுரேஷ், துணைத்தலைவர் விஜய கிருஷ்ணா ஆகியோர் வழங்கினர். அதனை நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த், சுகாதார ஆய்வாளர் சுப்பையா, இளநிலை உதவியாளர் வாசுதேவன், சாய் சேவா நிறுவனங்களின் மாவட்ட தலைவர் வேலுமணி, கொடைக்கானல் பொறுப்பாளர் சாந்த சதீஷ், அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.