

வையம்பட்டி,
விழுப்புரத்தில் இருந்து திண்டுக்கல் வரை இரட்டை ரெயில் பாதை அமைக்க ரெயில்வே துறை முடிவு செய்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியை அடுத்த கல்பட்டிசத்திரம் பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் கல்பட்டிசத்திரம் ரெயில் நிலையம் முதல் திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி ரெயில் நிலையம் வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கல்பட்டி சத்திரம் ரெயில் நிலையம் முதல் பெட்டிநாயக்கன்பட்டி வரையிலான பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் பெட்டிநாயக்கன்பட்டி முதல் தாமரைப்பாடி வரை ரெயில் சோதனை ஓட்டம் நடத்திட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் 7 டிராலிகள் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது ரெயில்வே தண்டவாளத்தில் பெட்டிநாயக்கன்பட்டி முதல் தாமரைப்பாடி வரை சுமார் 23 கிலோ மீட்டர் தூரம் டிராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து சோதனை ரெயிலை இயக்கிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் மாலை மழை பெய்ததாலும் சோதனைக்கு வந்த ரெயில் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதாலும் சோதனை நடைபெறவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று காலை ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்காக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த ரெயில் என்ஜின் பெட்டிநாயக்கன்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சோதனை ரெயிலில் தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் ஏறிய பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அந்த ரெயில் தாமரைப்பாடி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து விரைவில் 2-வது ரெயில் வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய ரெயில் சோதனை ஓட்டத்தின்போது பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதால் ஒரு சில இடங்களில் சோதனை ரெயில் மெதுவாக சென்றது. இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவுபெறும் பட்சத்தில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் வரை இரட்டை ரெயில் தண்டவாளத்தில் ரெயில்கள் இயக்கப்படும். இதன்மூலம் பயண நேரம் குறையும்.