கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை: கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மலைக்கிராம மக்கள்

கொடைக்கானல் பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால், கயிறு கட்டி ஆற்றை கடக்கும் அவலநிலைக்கு மலைக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை: கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மலைக்கிராம மக்கள்
Published on

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நேற்று காலை 9 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள வெள்ளிநீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோலா அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும், நட்சத்திர ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

பலத்த காற்று வீசியதில் வடகவுஞ்சி மற்றும் பூண்டி பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று மரங்களை அகற்றினர்.

இதேபோல் நேற்று பகல் 12 மணியளவில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் செண்பகனூர் அருகே 2 மின்கம்பங்கள் சாய்ந்தன.இதனால் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உடனே மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விரைந்து சென்று மின்கம்பங்களை அகற்றி மின்வினியோகத்தை சீரமைத்தனர்.

இதேபோல் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பெரும்பாறை அருகே உள்ள கல்லக்கிணறு கிராமத்தின் குறுக்கே செல்லும் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த ஆற்றை கடந்து செல்ல இரு கரையோரத்திலும் உள்ள மரங்களில் பொதுமக்கள் கயிறு கட்டி உள்ளனர்.

அந்த கயிற்றை பிடித்தபடி ஆபத்தான முறையில் மலைக்கிராம மக்கள் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். இன்னும் தண்ணீர் கூடுதலாக வந்தால் ஆற்றில் அடித்து செல்லப்படும் அவலநிலைக்கு மலைக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல்லில் நேற்று அதிகாலை 3.30 மணி முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் திண்டுக்கல்-பழனி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றன. மேலும் திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது.

ஆனாலும் வியாபாரிகள், காய்கறிகளை பெட்டிகளில் வைத்து விற்பனை செய்தனர். சகதி மற்றும் மழைநீரால் சூழப்பட்ட மார்க்கெட்டுக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர். சீலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மூவேந்தர் நகரில் மண்பாதையில் அரிப்பு ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக மாறியது.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி திண்டுக்கல்லில் 39.7 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் கொடைக்கானல் பகுதியில் 7.6 மில்லி மீட்டரும், பழனியில் 2 மில்லிமீட்டரும், வேடசந்தூரில் 3.6 மில்லி மீட்டரும், கொடைக்கானல் போட்கிளப் பகுதியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com