ராஜீவ்காந்தி கொலை சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
Published on

நாகர்கோவில்,

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினார். பின்னர் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் மற்றும் பா.ஜனதாவினர் இணைந்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

அதன் பிறகு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை மிக சிறப்பாக செய்துள்ளது. சுதந்திரம் பெற்றது முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தன. ஆனால் 2014-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள சிறைகள் சொர்க்க புரியாக மாறி உள்ளது. பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டும் இடமாக தமிழக சிறைகள் மாறி இருக்கின்றன. அதோடு மட்டும் அல்லாது சாதாரண மக்களும் ஜெயிலுக்கு சென்றால் சுகமாக வாழலாம் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. எனவே இதற்கு காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதோடு விட்டு விடாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, கோர்ட்டு உத்தரவுபடி கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த பரிந்துரையை சட்ட ரீதியாக அணுகும் விதமாக கவர்னர் ஆலோசித்து வருகிறார். என்னை பொறுத்த வரை ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஏன் எனில் அந்த சம்பவத்தில் ராஜீவ்காந்தி மட்டும் கொல்லப்படவில்லை. போலீஸ் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் தூய்மையே சேவை இயக்கத்தை தொடங்கி வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, குமரி மாவட்டம் உள்பட மொத்தம் 29 மாவட்டங்கள் திறந்தவெளி மலம் கழிக்காத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com