ரெட்டிச்சாவடி இரட்டை கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் சிக்கினர்

ரெட்டிச்சாவடி இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டிச்சாவடி இரட்டை கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் சிக்கினர்
Published on

கடலூர்,

கடலூர் அருகே ரெட்டிச்சாவடி போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு சதீஷ், வினோத்குமார் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ரெட்டிச்சாவடி நாகவள்ளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செங்கேணி மகன் லட்சுமணன் (வயது 40), கீழ்அழிஞ்சிப்பட்டை சேர்ந்த முருகன் மகன் டேவிட் ராஜ்(26), ராமு மகன் சதஷ்(25), மேல்அழிஞ்சிப்பட்டு ஏழுமலை மகன் பாலமுருகன்(28) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே லட்சுமணன், டேவிட்ராஜ், சதிஷ், பாலமுருகன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். அதன் பின்னர் அவர்கள் வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர். இதனால் அவர்களுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த லட்சுமணனை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டிச்சாவடி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் டேவிட் ராஜ் உள்ளிட்ட 3 பேரும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள செங்கல் சூளையில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் சேந்தமங்கலத்துக்கு சென்று, அங்கு தலைமறைவாக இருந்த டேவிட்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் மடக்கி பிடித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com