வேலையை விட்டு நீக்குவதை தவிர்க்க வேண்டும்; தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கலாம் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

வேலையை விட்டு நீக்கவதை தவிர்த்துவிட்டு தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கலாம் என்று துணை முதல்- மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
வேலையை விட்டு நீக்குவதை தவிர்க்க வேண்டும்; தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கலாம் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
Published on

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பெங்களூருவில் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் பயோகான் தலைவர் கிரண் மஜூம்தர், தகவல் தொழில்நுட்ப நிறுவன தலைவர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனனர். அதன் பிறகு அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

புதிய திட்ட பணிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் நிறுவனங்களை மூடுவது, ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது சரியல்ல. ஏனென்றால் பணி நீக்கம் செய்யப்படுபவர்கள், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் புதிய வேலையை தேடுவது என்பது கடினமான ஒன்று. வேலையை விட்டு நீக்குவதை தவிர்த்துவிட்டு, சம்பபளம் குறைப்பு போன்ற விஷயங்களில் ஈடுபடலாம் என்ற கூறினேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்

அதன்படி ஊழியர்களை வேலையை விட்டு நீக்காமல், சம்பளத்தை குறைக்கலாம். நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அப்போது என்ன செய்வது என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த விஷயத்தில் சரியான வழிகாட்டுதலை வழங்குமாறு நிறுவனங்கள் கோரியுள்ளன. சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளேன்.

நிறுவனங்கள், தூய்மையை பராமரிப்பது, சமூக விலகலை பின்பற்றுவது, ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தை சோதிப்பது போன்ற பணிகளை செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும். இத்தனை நாட்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, கொரோனாவை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

போக்குவரத்து இருக்காது

அடுத்து வரும் நாட்களில் நாம் கொரோனாவுடன் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். மக்களிடையே இதுகுறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனைகளை அதிகரிப் பதன் மூலம் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வருகிற 20-ந் தேதிக்கு பிறகு சில அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே திறந்திருக்கும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

வாடகை கார்கள், ஆட்டோக்கள், பஸ்கள், மெட்ரோ ரெயில், ரெயில் போக்குவரத்து இருக்காது. அதனால் பாஸ் வழங்கும் தேவை இருக்காது. இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். கார்களில் 2 பேர் பயணம் செய்யலாம். பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது.

வாடகைக்கு பயன்படுத்தலாம்

வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் திறக்கப்பட மாட்டாது. கல்வி நிலையங்களும் திறக்க அனுமதி இல்லை. அதனால் 20-ந் தேதிக்கு பிறகும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மிக குறைவாகவே இருக்கும். தொழில்நுட்ப நிறுவனங்கள் பி.எம்.டி.சி. பஸ்களை குத்தகை அடிப்படையில் வாடகைக்கு பயன்படுத்தலாம்.

ஆனால் பஸ்களிலும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும். கொரோனாவை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை அந்த நிறுவனங்கள் பாராட்டின. இதற்கு தனியார் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளன. நாட்டின் பிற மாநகரங்களை விட பெங்களூருவில் இந்த நெருக்கடி நிலையை சரியான முறையில் நிர்வகித்துள்ளோம்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com