ஜப்பானில் மர்மமாக இறந்த நெல்லை என்ஜினீயரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

ஜப்பானில் மர்மமாக இறந்த என்ஜினீயரின் உடலை மீட்டுத்தர வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஜப்பானில் மர்மமாக இறந்த நெல்லை என்ஜினீயரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணம் அருகே உள்ள பாப்பான்குளம் ஆனிகுளத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் மாதவன் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயரான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டுக்கு சென்று, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி மாதவன் திடீரென்று மர்மமாக இறந்து விட்டதாக, அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டரிடம், மாதவனின் நிலைமை குறித்து அறிந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தனர். ஆனாலும் மாதவனின் நிலைமை குறித்து குடும்பத்தினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

சாலைமறியல் போராட்டம்

இதையடுத்து மாதவனின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாசல் அருகில் அமர்ந்து சோகத்தில் அழுதவாறு போராட்டம் நடத்தினர். இதைக்கண்ட போலீசார், அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், அவர்களிடம் ஆவேசமாக பேசியதாக தெரிகிறது.

இதை கண்டித்து மாதவனின் உறவினர்கள், அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். சிலர் கலெக்டர் அலுலகத்துக்குள் சென்று, கட்டிட நுழைவுவாசல் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டரிடம் முறையீடு

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாதவனின் உறவினர்கள் சிலரை மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அவர்கள், அங்கு கலெக்டர் ஷில்பாவை சந்தித்து, ஜப்பான் நாட்டில் இறந்த மாதவன் உடலை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது கலெக்டர், தூதரகம் மூலம் மாதவன் உடலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 2 நாட்களுக்குள் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து மாதவனின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக, அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com