மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளதால் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, வருவாய் கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், சுரேந்திரன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் பேசும்போது கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக முன்கூட்டியே மழை பெய்ய தொடங்கியுள்ளது. எனவே தாசில்தார்கள் தங்கள் அலுவலகங்களில் செயல்படும் மழை மானிகளை சரியான நிலையில் இயங்குகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். அத்துடன் தினசரி 2 வேளையும் மழையளவை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். வருவாய்த்துறையினர் தங்கள் பகுதிகளில் பாதிப்பு எதுவும் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

மழைக்காலங்களில் சாலைகளில் மரம் விழுந்தால் மற்றும் மருத்துவமனைகளில் தங்கி உள்ள நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்பட்டாலோ அவைகளை உடனுக்குடன் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். மேலும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com