ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சிவகங்கையில் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் ஆக் கிரமிப்புகள் அகற்றும்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: சிவகங்கையில் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்
Published on

சிவகங்கை,

சிவகங்கை நகரின் முக்கிய வர்த்தக வீதியான நேருபஜார் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் அகற்றுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 28-ந்தேதி நேருபஜாரில் கடைகளின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். அப்போது அதிகாரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் செயலுக்கு அந்த பகுதி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய அவகாசம் தராமல் திடீரென்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு முழுவதையும் அதிகாரிகள் அகற்றினர். மேலும் நகரின் மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சிவகங்கை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதியுற்றனர்.

மேலும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில், சங்க தலைவர் அறிவுதிலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கந்தசாமி, மதி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பைசல், அ.ம.மு.க. நகர செயலாளர் அன்புமணி, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், தி.மு.க. சார்பில் அயூப்கான், ஜெயகாந்தன், வர்த்தகர் சங்க செயலாளர் வடிவேல், பொருளாளர் சுகர்னொ, துணைத்தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் அர்ச்சுனன், த.மா.கா. நகரச் செயலாளர் செல்வரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் வெள்ளையப்பன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com