சாதிச்சான்றிதழ் வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சாதிச்சான்றிதழ் வழங்க கோரி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாதிச்சான்றிதழ் வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

கள்ளக்குறிச்சி,

கல்வராயன்மலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்து மலைக்குறவர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் இடம்பெயர்ந்து தற்போது சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சாதிச்சான்றிதழ் கேட்டு வருவாய்துறை அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பங்கள் கொடுத்தும், இதுவரை அதிகாரிகள் சாதிச்சான்றிதழ் வழங்கவில்லை. இதன் காரணமாக மலைக்குறவர் இனத்தை சேர்ந்த மக்களின் குழந்தைகள் மேற்படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அரசு உதவித்தொகை மற்றும் வேலை வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்க முடியாமலும் சிரமப்படுகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு இந்து மலைக்குறவன் சங்க மாநில தலைவர் ஜெகநாதன், செயலாளர் கனகராஜ், பொருளாளர் தீர்த்தகிரி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் சாதிச்சான்றிதழ் வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து சப்-கலெக்டர் ஸ்ரீகாந்திடம் சாதிச்சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com