

திருச்சி,
தமிழ்நாடு சலவைத்தொழிலாளர் மத்திய சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் முருகேசன், துணை செயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சர்க்கரை வரவேற்று பேசினார். கல்வி, வேலைவாய்ப்பில் சலவைத்தொழிலாளர்களுக்கு 3 சதவீதம் தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டி போட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகும் தகுதியை சலவையாளர்களுக்கு அரசியல் கட்சிகள் கொடுக்க முன்வராத காரணத்தால் சலவைத்தொழிலாளர்களின் குறைகளை தெரிவிக்க வசதியாக சட்டமேலவை உறுப்பினர்களை அரசு நியமனம் செய்ய வேண்டும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சலவைத்தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பது, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தலா ஒரு பவர் லாண்டரி அமைத்து சலவை தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் மலர்மன்னன் நன்றி கூறினார்.