வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த பால்ரெட்டிக்கண்டிகை, தாராட்சி மதுரா பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் வ.பாலா என்கின்ற பாலயோகி, செல்வராஜ் ஆகியோர் தலைமையில் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் தாராட்சி மதுரா, பால்ரெட்டிக்கண்டிகை போன்ற பகுதிகளில் ஏரிக்கால்வாய் ஓரம் காலம் காலமாக குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் எங்கள் வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மனு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று எங்களிடம் தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் எங்கள் வீடுகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் முறையிட்டோம்.

இருப்பினும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை என்றால் வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவோம் என தெரிவித்தனர். எனவே எங்களுக்கு மாற்று வீட்டு மனைகளை வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுவரையிலும் நாங்கள் தொடர்ந்து தற்போது வசிக்கும் இடத்திலேயே வசிக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் பொய் வழக்கு தொடர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com