உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு; விவசாய சங்க தலைவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு; விவசாய சங்க தலைவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
Published on

போராட்டம்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கோமதி அம்மன் நகர் பகுதியில் உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்று உள்ளது. அதன் அருகில் புதியதாக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகத்தூர் கோமதி அம்மன் நகர் பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க பணியைத் தொடங்கினர். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திருவள்ளூர் மின்சார வாரிய என்ஜினீயர் சம்பத்குமார், திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, மணவாளநகர் இன்ஸ்பெக்டர் நடராஜன், அதிகத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரியாமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் முரளி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

தற்கொலை முயற்சி

இதைத்தொடர்ந்து அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகியும், மாவட்ட விவசாய சங்கத் தலைவருமான மேல்நல்லாத்தூரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 69) என்பவர் சுமார் 100 அடி உயரமுள்ள உயர் மின்னழுத்த கோபுரம் மீது ஏறினார்.

பின்னர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதைக்கண்ட போலீசார் ஒலிபெருக்கி மூலம் மின் கோபுரம் அமைக்கும் பணி இனி நடைபெறாது என தெரிவித்தனர். பின்னர் ஆறுமுகம் மெதுவாக உயர் மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்டோர் அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்தினார்கள். பின்னர் அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com