எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு: கடைகள் அடைப்பு; ஆட்டோ, வேன்கள் ஓடவில்லை

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நன்னிலம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆட்டோ, வேன்கள் ஓடவில்லை. விவசாய சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு: கடைகள் அடைப்பு; ஆட்டோ, வேன்கள் ஓடவில்லை
Published on

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தீயணைப்பு நிலையம் பின்புறம் தென்னஞ்சார் என்ற இடத்தில் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதி விவசாயிகள் மற்றும் சமூக அமைப்பினர் ஓ.என்.ஜி.சி. பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு பணிகளை நிறுத்துமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து நன்னிலம் போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு விவசாயிகளுக்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினருக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை கூட்டம் நன்னிலம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதன் முதல் கட்டமாக நேற்று நன்னிலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரி நன்னிலம், சன்னாநல்லூர், மாப்பிள்ளைக்குப்பம், தென்னஞ்சார், அச்சுதமங்கலம், ஆண்டிப்பந்தல், பனங்குடி உள்பட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும், ஆட்டோ, வேன்கள் ஓடவில்லை மற்றும் நன்னிலம் பகுதியை சேர்ந்த வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். இதனால் இப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க ஓ.என்.ஜி.சி. பணி நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழியில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எண்ணெய் கிணறு அமைக்க நடைபெறும் ஆயத்த பணிகளை பார்க்க அங்கு வந்தார். அப்போது போலீசார், பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி டெல்டா பகுதியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திட்டமிட்டு அழிக்க பார்க்கிறது. எந்தவிதமான கருத்து கேட்பும் பொதுமக்களிடம் கேட்காமல் இங்கு பணியை தொடங்கி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்த போது இனிமேல் புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கமாட்டோம் என்றும், அப்படி அமைப்பதாக இருந்தால் அந்த பகுதி மக்களிடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் கருத்து கேட்கப்பட்டு அதன் முடிவை மாவட்ட கலெக்டர் தலைமையில், அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் ஆலோசனை செய்து, அதனை தலைமை செயலாளருக்கு அனுப்பி, அதன் பின்னர் அவர்கள் உத்தரவுக்கு பிறகே புதிய எண்ணெய் கிணறுகள் தொடங்குவோம் என பேசி முடிவு எடுத்தோம்.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென நன்னிலத்தில் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நடைபெறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். போலீஸ் துறையை வைத்து அச்சுறுத்துவதை ஏற்க மாட்டோம். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் காவிரி டெல்டா பகுதியை விட்டு வெளியேறும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இங்கு நடைபெறும் பணிகளை உடன் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காவிரி விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் உதயகுமார், நிர்வாகி பொன்னிகைலாசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com