சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு: மீன்களை ரோட்டில் கொட்டி வியாபாரிகள் போராட்டம்

முதலியார்பேட்டையில் சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோட்டில் மீன்களை கொட்டி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு: மீன்களை ரோட்டில் கொட்டி வியாபாரிகள் போராட்டம்
Published on

புதுச்சேரி,

புதுவை நகரப்பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் கடந்த காலங்களில் அகற்றப்பட்ட நிலையில் முதலியார்பேட்டை பகுதியில் மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. ரவுடிகள் மிரட்டல், ஆக்கிரமிப்பாளர்களின் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகளின் பார்வை அந்த பக்கம் படாமல் இருந்தது.

இதன் காரணமாக 100 அடி ரோடு, கடலூர் சாலை என முதலியார்பேட்டை பகுதியின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. சாலையோரம் சுகாதாரமற்ற முறையில் பழக்கடைகள், காய்கறி, மீன் மற்றும் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. நாளுக்குநாள் அதிகரித்து வரும் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளின் காரணமாக முதலியார்பேட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி, பழங்கள், மீன்கள் என அனைத்து கடைகளின் விற்பனையும் பாதிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் நஷ்டம் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று முதலியார்பேட்டை மார்க்கெட் வியாபாரிகள் முதலியார்பேட்டை-உப்பளம் சாலை சந்திப்பில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மீன் விற்கும் பெண்கள் தாங்கள் விற்பனைக்கு கொண்டு வந்த மீன்களை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பாஸ்கர் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகள், போலீசாருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com