நண்பரின் கொலைக்கு பழிக்குப்பழி: 2 பேரை கொன்ற வழக்கில் 5 வாலிபர்களுக்கு இரட்டை ஆயுள் - கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

நண்பரின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக இரண்டு பேரை கொன்ற வழக்கில் 5 வாலிபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
நண்பரின் கொலைக்கு பழிக்குப்பழி: 2 பேரை கொன்ற வழக்கில் 5 வாலிபர்களுக்கு இரட்டை ஆயுள் - கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Published on

கோவை,

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர்கள் குண்டுராஜா(வயது 30). செல்வராஜ்(42), ஆனந்தகுமார்(33). இவர்களில் ஆனந்தகுமார் ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்குமார்(25), சூர்யா(21) மற்றொரு சூர்யா(29), மோகன்ராஜ்(20), விக்னேஷ்குமார்(21) மற்றும் கோவையை அடுத்த போளுவாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த விஜயராஜ்(22). இவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் பெண் விவகாரம் காரணமாக குண்டு ராஜாவுக்கும், வினோத்குமாருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. இதற்கிடையில் குண்டுராஜாவும், அவரது நண்பர் செல்வராஜும் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதம் 2-ந் தேதி வினோத்குமாரை வெட்டிக் கொலை செய்தனர்.

இதை தொடர்ந்து குண்டுராஜாவும், செல்வராஜும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலைக்கு ஆட்டோ டிரைவர் ஆனந்தகுமார் உதவி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. தங்கள் நண்பர் வினோத்குமாரை கொலை செய்யப்பட்டதால் அவரது நண்பர்கள் மிகவும் ஆத்திரம் அடைந்தனர். நண்பர் வினோத்குமாரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவரது நண்பர்கள் திட்டமிட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வினோத்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குண்டுராஜாவும், செல்வராஜும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த தகவல் வினோத்குமாரின் நண்பர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அடிக்கடி சந்தித்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி மதியம் 12 மணி அளவில் செல்வபுரம் ஐ.யு.டி.பி. காலனியில் வினோத்குமாரின் நண்பர்கள் சூர்யா உள்பட 5 பேர் அங்கு உட்கார்ந்திருந்தனர். அப்போது அங்கு ஒரு ஆட்டோ வந்தது. அதில் குண்டுராஜா, செல்வராஜ் வருவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனதைதொடர்ந்து வினோத்குமாரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க திட்டமிட்டனர்.

ஆட்டோ அருகில் வந்ததும் 5 பேரும் வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் ஆட்டோவில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினார்கள். ஆனால் ஆட்டோவில் செல்வராஜ் மட்டுமே இருந்தார். குண்டுராஜா இல்லை. ஆட்டோவை ஆனந்தகுமார் ஓட்டி வந்தார். இந்த தாக்குதலில் செல்வராஜ், ஆனந்தகுமார் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கோவையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக கோவை செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சூர்யா, மற்றொரு சூர்யா, மோகன்ராஜ், விக்னேஷ்குமார், விஜயராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 302(கொலை), 148(பயங்கர ஆயுதங்களுடன் கூடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பில் 17 சாட்சிகள், 42 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

செல்வராஜ் மற்றும் ஆனந்தகுமாரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபர்கள் சூர்யா, மற்றொரு சூர்யா, மோகன்ராஜ், விக்னேஷ்குமார், விஜயராஜ் ஆகிய 5 பேருக்கும் இரண்டு கொலை சம்பவத்துக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மலர் வாலண்டினா தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜ் தவிர மற்ற 4 பேருக்கும் தலா ரூ.12 ஆயிரமும், மோகன்ராஜுக்கு ரூ.11 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com