கச்சத்தீவை மீட்க வருவாய்த்துறையும் இணைந்து வழக்கு நடத்துகிறது - அமைச்சர் உதயகுமார் பேச்சு

தமிழர்களின் நலனுக்காக கச்சத்தீவை மீட்க வருவாய்த்துறையும் இணைந்து வழக்கு நடத்தி வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
கச்சத்தீவை மீட்க வருவாய்த்துறையும் இணைந்து வழக்கு நடத்துகிறது - அமைச்சர் உதயகுமார் பேச்சு
Published on

திருமங்கலம்,

திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள 27 வார்டுகளில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். திருமங்கலம் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயன், அவைத்தலைவர் ஜகாங்கீர் ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழழகன், ஆண்டிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் உதயகுமார் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- அ.தி.மு.க. அரசு இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும். பொதுமக்களையும் இளைஞர்களையும் பாதுகாக்கும் திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழக இளைஞர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

234 தொகுதிகளில் உள்ள இளைஞர்களின் சைக்கிள் பேரணியை கண்டு எதிரிகள் மிரண்டு உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அம்மா என்ற பெயர் சூட்ட வேண்டும் என்ற ஜெயலலிதா பேரவை தீர்மானத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்றுக்கொண்டு உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை என அழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழர்களின் நல்வாழ்விற்கு கச்சத்தீவை மீட்க வருவாய்த்துறையும் இணைந்து வழக்கு நடத்தி வருகிறது. தமிழக அரசிற்கு மேகதாது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை மட்டுமே உள்ளது. மற்ற அனைத்திலும் தமிழக அரசு வெற்றி பெற்று உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார பணிக்கு நகர் பகுதிகளில் குப்பைகளை பிரித்து வாங்கும் 12 வாகனங்களை திருமங்கலம் சுகாதார பணியாளர்களுக்கு வழங்கினார். நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, பொறியாளர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com