முதுமலையில் யானை சவாரி மீண்டும் தொடங்கியது

முதுமலையில் 48 நாட்களுக்கு பிறகு மீண்டும் யானை சவாரி தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
முதுமலையில் யானை சவாரி மீண்டும் தொடங்கியது
Published on

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகமானது 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வரும் இந்த வனபகுதியில் தாயிடம் இருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் பிடித்து வரப்பட்டு தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் வளர்க்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த முகாமில் 22 வளர்ப்பு யானைகள் உள்ளன. இவைகள் யானை சவாரி, ரோந்து பணி செல்லவும், விவசாய நிலங்களுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டும் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முகாமில் உள்ள யானைகளுக்கு ஓய்வு அளித்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு சார்பாக புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதுமலை வளர்ப்பு யானைகளுக்கான 10-வது புத்துணர்வு முகாம் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி தொடங்கியது.

புத்துணர்வு முகாமில் யானைகள் கலந்து கொண்டதால் சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்டு வந்த யானை சவாரியும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

48 நாட்கள் நடைபெற்ற இந்த புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது. இதனையடுத்து கும்கி யானைகள் தங்களுடைய வழக்கமாக மேற்கொள்ளும் ரோந்து செல்லுதல், காட்டு யானைகளை விரட்டுதல், களை செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்ய தொடங்கி உள்ளன. குறிப்பாக யானை சவாரி நேற்று காலை முதல் தொடங்கியது. முதல் நாள் என்பதால் குறைந்த சுற்றுலா பயணிகளே யானை சவாரி சென்று மகிழ்ந்தனர்.

2 கும்கி யானைகள் மட்டும் சவாரிக்கு பயன்படுத்தப்பட்டன. அதற்கு கட்டணமாக உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 4 பேருக்கு 1120 ரூபாயும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்றால் 11 ஆயிரத்து 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த யானை சவாரி காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. 48 நாட்களுக்கு பிறகு யானை சவாரி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com