பறந்து வரும் அரிசி வண்டுகளால் அவதி: புதுமண்ணை உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பறந்து வரும் அரிசி வண்டுகளால் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் புதுமண்ணை உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கை நேற்று முற்றுகையிட்டனர்.
பறந்து வரும் அரிசி வண்டுகளால் அவதி: புதுமண்ணை உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த புதுமண்ணை கிராமத்தில் தமிழக அரசின் உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கு 2013-ம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வருகிறது. அங்கு, ரேஷன் கடைகளில் வினியோகிக்கும் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் பாதுகாக்கப்படுகிறது.

அந்தக் கிடங்கில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டதில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குக்கு லாரிகள் மூலம் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. அங்கு, லட்சக்கணக்கான டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நாள் ஒன்றுக்கு 35 டன்னுக்குமேல் அரிசி, கிடங்குக்கு வருகிறது. அந்தக் கிடங்கைச்சுற்றி புதுமண்ணை, கொளக்கரவாடி, ஈசங்குப்பம், யாதவர்புரம், கெளத்தூர், கரடிகொண்ணை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமங்களில் ஏராளமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

அந்தக் கிடங்கு தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிறது. கிடங்கில் இருந்து அரிசி வண்டுகள் பறந்து வந்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக அரிசி வண்டுகளால் புதுமண்ணை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று பொதுமக்கள் பலர் திரண்டு வந்து புதுமண்ணை உணவுப் பொருள் பாதுகாப்பு கிடங்கை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

இந்தக் கிடங்கில் இருக்கும் அரிசி வண்டுகளை அழிக்க மருந்து அடிக்க வேண்டும். கடந்தசில நாட்களாக நாங்கள் அரிசி வண்டுகளால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். கிடங்கில் இருந்து வண்டுகள் பறந்து வந்து கிராமங்களில் உள்ள வீடுகளில் அமர்ந்து விடுகிறது. வீடுகளில் உள்ள குடிநீர், சாதம் ஆகியவற்றில் விழுந்து விடுகிறது.

இரவில் படுத்துத்தூங்கும்போது பெரியவர் முதல் குழந்தைகள் வரை அவர்களின் காது, மூக்கில் அரிசி வண்டுகள் புகுந்து விடுகின்றன. இதனால் பலர் காது வலியாலும், மூச்சுவிட முடியாமலும் சிரமப்படுகின்றனர். அரிசி வண்டுகள் கடிக்கும் இடத்தில் வீக்கம், எரிச்சல் ஏற்படுகிறது. அரிசி வண்டுகளை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை வருவாய்த்துறையினர் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com