சாலையோர வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்; சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

சாலையோர வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையோர வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்; சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
Published on

புதுச்சேரி,

புதுவையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கலெக்டர் தலைமையில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கோரிமேடு ஜிப்மர் எதிரே இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், ஆம்பூர் சாலையில் உள்ள கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். ஆம்பூர் சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்போது போலீசாருக்கும் சாலையோர கடைக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் சாலையோர வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பினை உருவாக்கி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரை கண்டித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று சாலையோர கடைகளை அடைத்துவிட்டு வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே வியாபாரிகள் கூடினார்கள். அங்கிருந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

இதில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம், துரைசெல்வம், சந்திரசேகர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜாங்கம், சீனுவாசன், பிரபுராஜ், நிலவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் சுதேசி மில் வாசல் அருகே வந்தபோது தடுப்புக் கட்டைகளை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

இதையடுத்து வியாபாரிகள் மறைமலையடிகள் சாலையில் நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர், போலீசார், பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், ஜிந்தாகோதண்டராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினை தொடர்பாக கலெக்டரை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com