தமிழகம்-புதுச்சேரி பகுதியை கலக்கிய கோவில் கொள்ளையர்கள் 2 பேர் கைது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் நடவடிக்கை

தமிழகம், புதுச்சேரி பகுதியை கலக்கிய கோவில் கொள்ளையர்கள் 2 பேரை ஸ்ரீமுஷ்ணம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தமிழகம்-புதுச்சேரி பகுதியை கலக்கிய கோவில் கொள்ளையர்கள் 2 பேர் கைது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் நடவடிக்கை
Published on

ஸ்ரீமுஷ்ணம்,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா, குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று சாவடிக்குப்பம் அந்தோணியார்புரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்ற 2 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

17 கோவில்களில் கொள்ளை

விசாரணையில், அவர்கள் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்த முத்துசேர்வாமடம் பகுதியில் வசித்து வரும் திருவாரூர் மாவட்டம் ஓகையூர் கிராமத்தை சேர்ந்த நடராஜ் மகன் ஓகை குமார் (வயது 60), புதுச்சேரி லாஸ்பேட்டை சண்முகபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மவுலி (24) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் இருவரும் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நாச்சியார்பேட்டை மகா சக்தி மாரியம்மன் கோவில், வலசக்காடு வீரனார் கோவில் உள்பட குறிஞ்சிப்பாடி, புதுச்சேரி ரெட்டியார்பாளையம், சென்னை, கடலூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள 17 கோவில்களில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணத்தையும், சாமிகளுக்கு அணிவித்திருந்த நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

உல்லாசம்

மேலும் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை விற்று மது குடித்தும், பெண்களுடன் உல்லாசம் அனுபவித்தும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 4 கிராம் தங்கமும், ரூ.700 ரொக்கமும் மீட்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி பகுதியை கலக்கிய கோவில் கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com