குன்றத்தூர் அருகே வாலிபரிடம் கத்திமுனையில் வழிப்பறி; 3 பேர் கைது

குன்றத்தூர் அருகே வாலிபரிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்றத்தூர் அருகே வாலிபரிடம் கத்திமுனையில் வழிப்பறி; 3 பேர் கைது
Published on

பூந்தமல்லி,

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் விஷால்(வயது 20). அதே பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திருமுடிவாக்கம் வந்தபோது, ஒரே மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் விஷாலை வழிமறித்து கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணம் கேட்டு மிரட்டினர்.

அப்போது விஷால் கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பயந்துபோன மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.

3 பேர் கைது

உடனே விஷால் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள், வழிப்பறியில் ஈடுபட முயன்ற 3 பேரையும் மடக்கி பிடித்து, குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிடிபட்ட 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த நரேஷ்(22), விக்னேஷ் (21), அகத்தியன்(20) என்பதும், 3 பேரும் சேர்ந்து இரவு நேரங்களில் அந்த பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், நகை, பணத்தை பறித்து வந்ததும் தெரிந்தது.

பிடிபட்ட 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், 1 மோட்டார்சைக்கிள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com