ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ரூ.1 கோடியில் கட்டிடம் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ரூ.1 கோடியில் கட்டிடம் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குமரி மாவட்டம் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள் இரவில் தங்குவதற்கு ஆஸ்பத்திரியில் போதிய வசதி இல்லாமல் இருந்தது. இவர்கள் ஆஸ்பத்திரி வராண்டாவிலும், ஒதுக்குப்புறங்களிலும் தங்கி வந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் உள்நோயாளிகளின் உறவினர்களுடைய நலன் கருதி ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக தங்கும் இல்லம் கட்டப்பட்டு உள்ளது. மத்திய அரசு மற்றும் நாகர்கோவில் நகராட்சியின் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டு இருக்கின்றது. புதிய கட்டிடத்தில் ஆண்களுக்கு தனி படுக்கை வசதிகளும், பெண்களுக்கு தனி படுக்கை வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. ஆண்கள் தங்கும் அறையில் 54 கட்டில்களும், பெண்கள் தங்கும் அறையில் 54 கட்டில்களும் போடப்பட்டு உள்ளன. கழிவறை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மெஸ் வசதியும் செய்யப்பட இருக்கிறது.


இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு சேவா பாரதி மாநில செயலாளர் அரங்க ராமநாதன் தலைமை தாங்கினார். விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

விழாவில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பாலசுப்பிரமணியன், மருத்துவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன், நகராட்சி என்ஜீனியர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி கின்ஷால் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், நகர செயலாளர் நாகராஜன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com