மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.52 ஆயிரம் மதுபாட்டில்கள்- ரூ.10 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

நீடாமங்கலம் அருகே, மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.52 ஆயிரம் மதுபாட்டில்கள்- ரூ.10 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
Published on

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பச்சைக்குளம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், மதுக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து கடை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஊழியர்கள் கடைக்கு வந்து பார்த்தனர். அப்போது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த மதுபாட்டில்களையும், பணத்தையும் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தேவங்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள 315 மதுபாட்டில்களையும், ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து திருவாரூரில் இருந்து மோப்ப நாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த கடையில் இருந்து களத்தூர் மேல்கரை பாலம் வரை ஓடிச்சென்று அங்கேயே சிறிது நேரம் நின்று விட்டு திரும்பியது. தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடந்த மதுக் கடையில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களையும், பணத்தையும் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com