வில்லியனூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி; கணவன்- மனைவிக்கு வலைவீச்சு

வில்லியனூரில் தீபாவளி சீட்டு நடத்தி 1½ கோடி ரூபாய் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வில்லியனூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி; கணவன்- மனைவிக்கு வலைவீச்சு
Published on

வில்லியனூர்,

வில்லியனூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 48). இவர் அப் பகுதியில் பெரிய அளவில் கடை வைத்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இங்கு காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி பலராமன் பணம் வசூல் செய்தார்.

குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை மாத தொகையாக வசூலித்தார். தீபாவளி பண்டிகையின்போது காய்கறி, மளிகை பொருட்கள், தங்க காசு, பட்டாசு, இனிப்பு என பல பொருட்கள் தருவதாக பலராமன் கூறியிருந்தார். இதற்கு ஆசைப்பட்டு சுமார் 3 ஆயிரம் பேர் சீட்டு கட்டினர்.

தீபாவளி பண்டிகை நெருங்கியதால் பணம் கட்டியவர்கள் பலராமனிடம் பொருட்கள் கேட்டுள்ளனர். இதற்கு, கடந்த 2 நாட்களுக்கு முன் கடைக்கு வருமாறு சீட்டு கட்டியவர்களிடம் அவர் கூறினார். அதன்படி பொருட்கள் வாங்க காய்கறி கடைக்கு அன்று மாலை ஏராளமானவர்கள் வந்தனர். ஆனால் கடை பூட்டியிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலராமன் அவசர வேலை காரணமாக வெளியூர் சென்றிருக்கலாம் என்று அவர்கள் கருதி, திரும்பிச்சென்றனர்.

பின்னர் நேற்று முன்தினம் காய்கறி கடைக்கு மீண்டும் வந்தனர். அப்போதும் கடை மூடியிருந்தது. பலராமனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் பேச முடியவில்லை. எனவே பணத்தை மோசடி செய்து விட்டு பலராமன், தனது குடும்பத்துடன் ஓட்டம் பிடித்தது சீட்டு கட்டியவர்களுக்கு தெரியவந்தது.

ஆயிரக்கணக்கில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள், கடையின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தது குறித்து புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இந்த மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 1 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதும், பல இடங்களில் அவர் இதுபோல் மோசடி செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. தப்பியோடிய பலராமன் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com