

ஊட்டி,
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில், தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் போக்குவரத்து நிர்வாகத்தை கண்டித்து ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. துணை பொதுச்செயலாளர் கணேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து சம்பள பட்டியலை நீக்குவது கண்டிக்கத்தக்கது. ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
வருகை பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். கட்டாய விடுப்பு எழுதி வாங்குவதை கைவிடவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் இப்ராஹிம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களது ஊதியத்தை குறைக்காமல் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டி உள்ளன. ஆனால் அந்த வழிகாட்டுதலை கடைபிடிப்பதில்லை. ஆகவே ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும், வருகைப் பதிவு பணி வழங்கும் முறை அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஆனால், போக்குவரத்து நிர்வாகம் இதை கடைபிடிக்காமல் ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை என்று கடந்த 4 மாத காலமாக சம்பளம் வழங்காததால் பல தொழிலாளர்களின் குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. அவர்களுக்கு சம்பள இழப்பு ஏற்பட்டு உள்ளது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பணிமனை தொழிலாளர்கள், தணிக்கையாளர்கள், ஓட்டுநர் ஆய்வாளர்கள் ஆகியோரிடம் கட்டாய விடுப்பு எழுதி வாங்குவது, பேருந்து இல்லாத காரணத்தால் பணிக்கு வர இயலாத தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து கழக நிர்வாகத்தை பொது போக்குவரத்தாக மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார். அதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய போக்குவரத்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.