சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு மையம் தொடக்கம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு மையம் தொடக்கம்
Published on

சேலம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் நிலைக் கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்கள் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து வரப்படும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர். பின்னர் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்து கருவூலத்தில் சேர்த்து வருகின்றனர்.

மாவட்டத்தில் கட்சி சம்பந்தப்பட்ட விளம்பரங்கள், கொடிகள், பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. கட்சி தலைவர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் துணிகள் கொண்டு மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து தேர்தல் சம்பந்தப்பட்ட குறைகளை பொதுமக்கள் தெரிவிப்பதற்கு சி விஜில் என்ற செல்போன் செயலி மற்றும் 1800 4257 020 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் அரசியல் கட்சியினர் பரிசு பொருட்கள் வழங்குவது, டோக்கன் வினியோகம் செய்வது, அதிகப்படியான பணத்தை எடுத்து செல்வது உள்ளிட்ட தேர்தல் முறைகேடு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

தொலைபேசி மற்றும் செல்போன் செயலி மூலம் வரும் புகார்களை கண்காணித்து சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் வகையில், சுழற்சி அடிப்படையில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்துள்ளனர். மையத்தில் கொடுக்கப்படும் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் உள்ள 33 பறக்கும் படை மற்றும் 33 நிலைக்கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் முறைகேடு நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com