அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சேலம் கலெக்டர் ராமன்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சேலம் கலெக்டர் ராமன்
Published on

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கையால் அதன் தாக்கம் குறைந்து வருகிறது. இதையொட்டி கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆனால் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாமல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்தது. இதனால் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்தநிலையில், மருத்துவ பணியாளர்களை தொடர்ந்து 2-வது கட்டமாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் போலீஸ் துறையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட கலெக்டர் ராமன் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். ஆஸ்பத்திரியில் இருந்த மருத்துவ குழுவினர் கலெக்டருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முன்னதாக கலெக்டருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையும், இதயதுடிப்பும் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் இந்த தடுப்பூசி போடுவதால் எந்தவித உடல் பாதிப்பும் ஏற்படாது என்பதால் முன்கள பணியாளர்கள் பயமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ராமன் அலுவலர்களிடம் வலியுறுத்தினார். கலெக்டரை தொடர்ந்து துணை கலெக்டர் கீதாபிரியா, சேலம் உதவி கலெக்டர் மாறன் உள்பட மற்ற அதிகாரிகளும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் தனபால், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com