சேலம் பெரியபுதூரில் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேலம் பெரியபுதூரில் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் பெரியபுதூரில் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

சேலம்,

சேலம் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய புதூர் அருண்நகரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில் பெய்த கன மழையால் அருண்நகர் பகுதியில் உள்ள காலிமனைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இரவு நேரங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறார்கள். எனவே, பெரியபுதூர் அருண்நகரில் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அருண்நகரில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-
சேலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பெரியபுதூர் அருண்நகரில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாக்கடை கழிவுநீரும் கலந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீர் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகிறது. காலிமனைகளில் உள்ள கிணறு நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. சாக்கடை கால்வாய் வசதியும் கிடையாது. இதனால் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தண்ணீரில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. காலி மனைகளில் உள்ள கிணற்றை மூடுவதோடு, தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரில் நடந்து தான் வீடுகளுக்கு செல்லவேண்டிய நிலைமை உள்ளது. காய்ச்சல் உள்ளிட்டவைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தேங்கி நிற்கும் தண்ணீரில் நாற்று நடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com