நகைச்சுவை நடிகரை கடத்தி வழிப்பறி: சேலம் வாலிபர் கைது; செல்போன் மீட்பு

நகைச்சுவை நடிகரை கடத்தி வழிப்பறி செய்த வழக்கில் சேலம் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது.
நகைச்சுவை நடிகரை கடத்தி வழிப்பறி: சேலம் வாலிபர் கைது; செல்போன் மீட்பு
Published on

சூரமங்கலம்,

சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் சினிமா நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி(வயது40). இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். கொட்டாச்சி திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடந்த படப்படிப்பில் பங்கேற்று விட்டு, அவரது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சென்னை புறப்பட்டார்.

நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து தனியார் சொகுசு பஸ் மூலம் சென்னை செல்ல ஆட்டோவில் ஏறினார். சிறிது தூரம் சென்றதும் ஆட்டோ டிரைவரின் மேலும் நண்பர்கள் 2 பேர் ஏறினர்.

தாக்கி வழிப்பறி

ஆட்டோ குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல், 5 ரோடு அருகே உள்ள நரசோதிப்பட்டி நோக்கி சென்றது. அங்கு கடத்தி சென்ற நடிகர் கொட்டாச்சியை தாக்கி, அவரிடம் இருந்து ரூ.2,500 ரொக்கம், செல்போன், 2 பவுன்நகை மற்றும் ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டினை பறித்து கொண்டு ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரும் தப்பினர்.

பின்னர் சேலத்தை சேர்ந்த நடிகர் பெஞ்சமின் உதவியுடன் கொட்டாச்சி சேலம் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்தார்.

வாலிபர் கைது

இந்த நிலையில் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய சேலம் சின்ன அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனியை சேர்ந்த தீனதயாளன்(21) என்ற வாலிபரை நேற்று காலை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நடிகர் கொட்டாச்சியின் செல்போனை போலீசார் மீட்டனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் சாதிக், அவரது நண்பர் பாரதி ஆகியோரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com