சேலம்-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்

போலீசார் ‘டிவைடர்‘ வைக்க எதிர்ப்பு தெரிவித்து சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்தனர்.
சேலம்-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்
Published on

சூரமங்கலம்,

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா உள்ளது. இந்த சாலையை தாண்டிதான் சேலம் ஜங்சனுக்கும், அங்கிருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கும் வாகனங்கள் சென்று வருகின்றன. அங்கு உயர்மட்ட பாலம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை சரிசெய்ய ரூ.26 கோடியே 77 லட்சம் மதிப்பில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனை சமீபத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த பாலம் இறங்கும் இடத்தில் இருந்து கந்தம்பட்டி ரெயில்வே மேம்பாலம் தொடங்குகிறது. இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் குறுக்காக மேம்பாலம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், காந்தி வட்டம், வண்டிக்கார வட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வாகனத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் திருவாக்கவுண்டனூர் ரவுண்டானாவில் இருந்து மேம்பாலநகர் செல்லும் அணுகுசாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்கள் கடந்து செல்லாதபடி, போலீசார் டிவைடர் வைத்து தடுப்பு ஏற்படுத்தினர்.

இதனால், மேம்பாலநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் ரவுண்டானா பகுதியில் இருந்து அணுகுசாலை வழியாக ஊருக்குள் செல்லத்தான் முடியும். ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு விட்டதால், அங்கே இருந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. மேம்பாலநகர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் எப்படி வெளியே வரும் என்ற எதிர்ப்பு கிளம்பியது.

எனவே, போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படுத்திய டிவைடரை அகற்ற வேண்டும் எனவும், அணுகு சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேம்பாலம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், காந்தி வட்டம், வண்டிக்கார வட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பகல் 12.10 மணிக்கு திரண்டனர்.

பின்னர் அங்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசினார்கள். போலீஸ் தரப்பில், மாவட்ட கலெக்டரிடம் மனுவாக கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். தேசிய நெடுஞ்சாலையில் குறுக்காக வாகனம் சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சாலைமறியலை கைவிட்டு சாலையோரம் சென்றனர். பொதுமக்களிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். 20 நிமிட மறியல் போராட்டம் காரணமாக அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதித்தது.

அப்போது பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்,தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் இது குறித்து கடந்த 6 மாதத்திற்கு முன்பே கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேம்பாலநகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து பள்ளி வாகனங்கள் உள்பட வெளிவாகனங்கள் எப்படி வெளியே சென்று வரமுடியும். உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், வருகிற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவெடுத்துள்ளோம். மாநகராட்சி 24 வார்டு மற்றும் 23-வது வார்டின் ஒரு பகுதி எங்கள் பகுதியில்தான் அடங்கி உள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com