மணல் கடத்திய 9 பேர் கைது

மணல் கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணல் கடத்திய 9 பேர் கைது
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த திருமால்பூர் அருகே வதியூர் பம்பை கால்வாய் பகுதியில் டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகருக்கு தகவல் வந்தது. அதையொட்டி போலீசாருடன் அவர் அங்கு விரைந்து சென்றார். அப்போது டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் கடத்தியது தெரிய வந்தது.

அதையொட்டி டிப்பர் லாரி டிரைவரான அரக்கோணம் தாலுகா, நெல்வாய் கண்டிகை பகுதியை சேர்ந்த கர்ணன் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த டிப்பர் லாரி கிளனர் லோகநாதன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அன்பு (30), கமல் (32), பிரகாசம் (35) ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

டிராக்டரில் மணல் கடத்திய பாலுச்செட்டிசத்திரம் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பார்த்திபன் (25) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான டிராக்டர் உரிமையாளர் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த லட்சுமிபதி(35) என்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

களக்காட்டூர்

காஞ்சீபுரத்தை அடுத்த களக்காட்டூர் ஜங்சனில் மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் யோவானுக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் அங்கு போலீசாருடன் விரைந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையொட்டி காஞ்சீபுரம் அடுத்த குருவிமலை பகுதியை சேர்ந்த பரமசிவம் (38), வரதன் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

ஆவாஜிப்பேட்டை

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக பெரியபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு செய்தனர்.

அப்போது மணல் கடத்தி வந்த 4 மாட்டுவண்டிகளை கைப்பற்றினர். மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த ஆவாஜிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்களான பாரதி (39), சுந்தரேசன் (25), வெங்கடேசன் (44), பிரபாகரன் (21) ஆகியோரை கைது செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். 8 மாடுகளையும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூர் கோசாலையில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com