நாடாளுமன்ற தேர்தலில் சரத்பவார், மாயாவதி போட்டியிடாதது பா.ஜனதா கூட்டணி மீண்டும் வெற்றி பெறுவதற்கான அறிகுறி - சிவசேனா சொல்கிறது

நாடாளுமன்ற தேர்தலில் சரத்பவார், மாயாவதி போட்டியிடாதது பா.ஜனதா கூட்டணி மீண்டும் வெற்றி பெறுவதற்கான அறிகுறி என சிவசேனா கூறியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் சரத்பவார், மாயாவதி போட்டியிடாதது பா.ஜனதா கூட்டணி மீண்டும் வெற்றி பெறுவதற்கான அறிகுறி - சிவசேனா சொல்கிறது
Published on

மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

இவர்களின் முடிவு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சரத்பவாரை அடுத்து மாயாவதியும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இரண்டு பேரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.

நாடுமுழுவதும் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதால் போட்டியிடவில்லை என மாயாவதி கூறுகிறார். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. அப்படி இருக்கையில் அவரது முடிவுக்கு அர்த்தம் போட்டியில் இருந்து விலகி ஓடுவதே ஆகும்.

சரத்பவாரும் தேர்தல் களத்தில் இருந்து தப்பிக்க இதே வழியை தான் தேர்ந்தெடுத்து உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரின் சொந்த குடும்பத்தையும், கட்சி தொண்டர்களையும் ஒரே பக்கத்தில் நிற்கவைக்க அவரால் முடியவில்லை. இதனால் அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக நேரிட்டது.

உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தியின் வருகை பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகளின் கூட்டணி விளையாட்டை சீர்குலைக்கும்.

பிரதமர் பதவிக்கு கனவு கண்ட சரத்பவாரும், மாயாவதியும் போட்டியில் இருந்து விலகி இருப்பது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தகுதியை மெய்ப்பித்து விட்டது. அவர்கள் தங்களது பாதையில் இருந்து விலகி இருப்பது, மோடி மீண்டும் பிரதமராவதற்கான பாதை தெளிவாகி உள்ளதையும், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெறப்போவதற்கும் அறிகுறியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com