பள்ளி மாணவி கடத்தல்: கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

ஆனைமலை அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்ற கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பள்ளி மாணவி கடத்தல்: கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Published on

ஆனைமலை,

ஆனைமலையை அடுத்த வாழைக்கொம்பு நாகூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரது 17 வயது மகள் திவான்சாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 10-ந் தேதி பள்ளி சென்ற அந்த மாணவி மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் அவரது பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர்.

இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் தலைமையில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பள்ளியில் இருந்து மாயமான மாணவி கர்நாடக மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்ற கட்டிட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- பள்ளி சென்ற தனது மகள் காணவில்லை என்று அவரது பெற்றோர் புகார் கொடுத்தபோது, அதே பகுதியில் கட்டிட தொழில் செய்து வந்த பிரபு என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக மட்டும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த மாணவியுடன் படித்து வரும் தோழிகளிடம் விசாரணை நடத்தினோம். அதில் கட்டிட தொழிலாளியான சேலம் தீவப்பட்டி மோரூரைச் சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் என்பவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி வேலை செய்து வந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழைக்கொம்பு நாகூரைச் சேர்ந்த ஒரு மேஸ்திரி கட்டிட வேலைகளுக்காக மணிகண்டனை அங்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது.

அப்பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த மணிகண்டனுக்கும், அந்த பள்ளி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில்தான் அந்த மாணவி மணிகண்டனுடன் சென்றுவிட்டார். மணிகண்டன் ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் தங்கி வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், அம்மாநிலத்தில் உள்ள குண்டூர் காலனி பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது தோட்டத்திற்கு அந்த மாணவியுடன் சென்றுள்ளார். ரவிக்குமார் கேட்டபோது எனது உறவினர் பெண்தான் இவர். அவரை சமீபத்தில்தான் திருமணம் செய்துகொண்டேன், ஆகவே நாங்கள் தங்கி வேலை பார்க்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மணிகண்டன் கூறியுள்ளார்.

அதனை நம்பி ரவிக்குமாரும் அவரது தோட்டத்தில் தங்கி வேலை பார்க்க அனுமதித்துள்ளார். மாணவியை அழைத்துச் செல்லும்போதே மணிகண்டன் தனது செல்போனை ஸ்விட்ச்-ஆப் செய்துவிட்டார். தொடர்ந்து கண்காணித்து வந்ததில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் செல்போனை ஆன் செய்ததும், டவர் இணைப்பு மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிந்து இருவரையும் மீட்டோம். மாணவி கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்திருந்தோம். தற்போது போக்சோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் (25) என்பவரை கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com