கடல் சீற்றத்தால் சேதமடையாத வலுவான அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

கொல்லங்கோடு பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடையாத வலுவான அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் சீற்றத்தால் சேதமடையாத வலுவான அலை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்
Published on

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடிகாலனி பகுதிகளில் தற்போது கடல் சீற்றம் அதிகரித்து வருகிறது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து வீடுகளுக்குள் புகுந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கடல் சீற்றத்தில் இருந்து மீனவ மக்களை காப்பாற்ற தற்போது, அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பொதுவாக உறுதியான அலை தடுப்பு சுவர் அமைக்க பயன்படுத்தும் பாறைகள் சதுரவடிவில் செதுக்கபட்டு, ஒரு கல் சுமார் ஒரு டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அந்த பாறைகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் முறையாக அடுக்கி வைக்க வேண்டும். கற்களை முறையாக அடுக்கி வைத்தால்தான் கடல் அரிப்பு மற்றும் சீற்றம் ஏற்படும் போது பாறைகள் கடலினுள் இழுத்துச் செல்வதை தடுக்க முடியும்.

ஆனால், தற்போது வீடுகள் கட்ட பயன்படுத்தபடும் சிறிய ரக பாறைகற்களை கடலில் கொட்டி அலை தடுப்பு சுவர் அமைத்து வருகின்றனர். இந்த கற்கள் கடல்சீற்றத்தின் போது, கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. ஒவ்வொரு முறை கடற்சீற்றம் ஏற்பட்டு தடுப்பு சுவர்கள் சேதமடைந்தாலும், மீண்டும், மீண்டும் அதே போன்று கற்களையே போட்டு செல்கின்றனர். இவ்வாறு உறுதியற்ற நிலையில் தடுப்பு சுவர் அமைப்பதினால் அரசு பணம்தான் வீணாகிறதே தவிர மீனவ மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என அந்த பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள்.

எனவே கடல் சீற்றத்தின்போது சேதம் அடையாதவாறு வலுவான அலை தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் ஓகி புயல் தாக்கிய போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, குமரி மாவட்டத்தின் மீனவ மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடிகாலனி பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடப்பட்டது. அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால், இதுவரை தூண்டில் வளைவு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வில்லை.

மீனவ கிராமங்களை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com