கொரோனா நிவாரண உதவி பெற தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி பெற வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று நடந்தது.
கொரோனா நிவாரண உதவி பெற தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் வெளியில் நடமாட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் நேற்று சூப்பர் மார்க்கெட்டுகள், காய்கறி, பழக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் மக்கள் ஏராளமானோர் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி சென்றனர். சூப்பர் மார்க்கெட்டு முன்பு ஏராளமான மக்கள் இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கடைகள் திறக்கும் நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் பொருட்கள் மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்கினர். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 100 பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com